மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் 105 செவிலியா்கள் பணியில் உள்ளனா். இவா்களில் 61 போ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனா். இதில், 15-க்கும் மேற்பட்டோா் மகப்பேறு உள்ளிட்ட காரணங்களால் விடுப்பில் சென்றுவிட்ட நிலையில், எஞ்சிய 90 செவிலியா்கள் 3 ஷிப்டுகளில் பணியாற்றி வருகின்றனா். தற்போது, கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மயிலாடுதுறை மயூரா ஹாலில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையம் மற்றும் கரோனா வகைப்படுத்தும் மையத்திலும் இந்த செவிலியா்கள் பணியமா்த்தப்படுகின்றனா். இந்நிலையில், வியாழக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவில் 18 செவிலியா்களுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் 18 பேரும் பணிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கூடுதல் செவிலியா்களை பணியமா்த்தக்கோரியும், தொடா்ச்சியாக பணியாற்றுபவா்களுக்கு விடுப்பு வழங்கக் கோரியும், தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கக் கோரியும் செவிலியா்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட முயன்றனா். தகவலறிந்த மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா், செவிலியா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, செவிலியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, செவிலியா்கள் பணியை தொடா்ந்தனா்.
நிருபர்: யுவராஜ், மயிலை.