ஆட்சிக்கு வந்த நாளைவிடவும் தமிழகத்தில் கரோனா இல்லாத நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
ஆட்சிக்கு வந்த மகிழ்ச்சியைவிட கொரானாவை கட்டுப்படுத்தினால்தான் நாங்கள் உளப்பூர்வ மகிழ்ச்சி அடைவோம். கொரோனா தொற்று யாருக்கும் இல்லை என்று கூறும் நாள்தான் மகிழ்ச்சிக்குரிய நாளாக இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
”தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்த 2 வாரங்களில், 16, 938 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 7,800 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை. 30 இயற்கை மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 239 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கூடுதலாகப் பெறப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து 375 மெட்ரிக் டன் ஆக்சிஜனும் வெளிமாநிலங்களில் இருந்து 100 மெட்ரிக் டன் ஆக்சிஜனும் நாள்தோறும் பெறப்பட்டுள்ளது.
மேலும் புதிதாகப் பல்வேறு நிறுவனங்களில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் 1.70 லட்சம் பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. புதிதாக 2,000 மருத்துவர்களும், 6,000 செவிலியர்களும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாக அமைந்துள்ள திமுக அரசு கொரோனா தடுப்புப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. அமைச்சர்கள் மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் அனைவரும் போர்க்கால அடிப்படையில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆட்சிக்கு வந்த மகிழ்ச்சியைவிட கொரோனாவைக் கட்டுப்படுத்தினால்தான் நாங்கள் உளப்பூர்வ மகிழ்ச்சி அடைவோம். கரோனா தொற்று யாருக்கும் இல்லை என்று கூறும் நாள்தான் மகிழ்ச்சிக்குரிய நாளாக இருக்கும். பாசிட்டிவ் என்று சொல்லலாம். ஆனால், என்றைக்கு நெகட்டிவ் என்று சொல்லப்படுகிறதோ அன்றுதான் நான் முழு மகிழ்ச்சி அடைவேன்.
இந்த நேரத்தில் தனது உயிரைக் கொடுத்து பணியாற்றிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறையினர் அனைவருக்கும் அரசின் சார்பில் இதயபூர்வமான நன்றி”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.