மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை தொடர்ந்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வழக்கம் போல் நேற்றும் திருக்கடையூர் அனைத்து கடைகளும் காலை 10 மணிக்கு அடைக்கப்பட்டன.
இந்த நிலையில் அரசு அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு பின் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் இயங்கலாம் என்று அறிவித்தது. இதனை தொடர்ந்து திருக்கடையூர் பகுதியில் உள்ள வியபாரிகள் தங்களது கடைகளை வழக்கம் போல் திறந்து வியாபாரம் செய்து வந்தனர்.
அப்போது அந்த பகுதிக்கு வந்த செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை கண்ணன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனகர் ஆகியோர் கொண்ட குழு திறந்திருந்த கடைகளுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வியாபாரிகள் பலர் ஒன்று சேர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை கண்ணன் வாகனத்தை முற்றுகையிட்டு, அரசு கடைகளை திறக்க அனுமதி அளித்தும் ஏன் அபராதம் விதித்தீர்கள்? என்று கேள்வி கேட்டனர்.இதனை தொடர்ந்து வசூலிக்கப்பட்ட அபராத தொகை திருப்பி அளிக்கப்பட்டது. இதனால் அந்தபகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நிருபர்: முரளிதரன், சீர்காழி.