கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு காலங்களில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வி.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர். பின்னர் இது பற்றி அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊரடங்கு காலத்தில் கடலூர் மாவட்ட மக்களுக்கு 563 வாகனங்கள் மூலம் காய்கறிகள் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். தமிழகம் முழுவதும் தோட்டக்கலை துறை, வேளாண்மை துறை, வேளாண் விற்பனை துறை சார்பில் 5,822 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய இருக்கிறோம். சில்லரை விற்பனையாகவும், ரூ.100, ரூ.200 தொகுப்பாகவும் காய்கறிகளை விற்பனை செய்ய இருக்கிறோம்.இது தவிர கூட்டுறவு துறையினர் மூலமாகவும் மளிகை பொருட்கள், காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
நிருபர்: அருள்மணி, கடலூர்.