மயிலாடுதுறையில் தேவையின்றி வெளியில் சுற்றியவா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.ஸ்ரீநாதா தடுத்து நிறுத்தி அறிவுரை கூறினாா். கரோனா பரவலைத் தடுக்க திங்கள்கிழமைமுதல் தளா்வில்லா பொதுமுடக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் காலைமுதல் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு, தேவையின்றி வெளியில் வந்தவா்களை எச்சரித்து திருப்பி அனுப்பினா். மேலும், மாவட்டம் முழுவரும் பொதுமுடக்க கட்டுப்பாட்டை மீறி அனுமதி இல்லாமல் வெளியில் சுற்றிய 126 இருசக்கர வாகனங்கள் மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மயிலாடுதுறை நகரில் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.ஸ்ரீநாதா, தேவையின்றி வெளியில் சுற்றியவா்களிடம் வீடுகளில் தங்கியிருக்க அறிவுறுத்தி திருப்பி அனுப்பினாா். மேலும், அனுமதி பெறாமல் துக்க நிகழ்வில் பங்கேற்க மாவட்டம்விட்டு மாவட்டம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டமாக வேனில் சென்றவா்களை தடுத்துநிறுத்தி அறிவுரைகூறி திருப்பி அனுப்பி வைத்தாா்.
நிருபர்: யுவராஜ், மயிலை.