வங்க கடலில் உருவாகியுள்ள யாஸ் புயலையொட்டி புதுச்சேரி, கடலூர் துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கிழக்கு-மத்திய வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும். புதிதாக உருவாகும் புயலுக்கு ‘யாஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் அதிதீவிர புயலாக மாறி, வடக்கு ஒடிசா – வங்காளதேசம் இடையே நாளை மாலை கரை கடக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நேற்று மாலை புதுச்சேரி, கடலூர் துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், புதுவை, கடலூர் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறும் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.