கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கான உதவிகளை கடலூா் மாவட்டக் காவல் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்.
கொரோனா காலத்தில் வீடுகளில் முடங்கியுள்ள முதியவா்களுக்கு உதவி செய்திடும் வகையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ்வால் 04142-284350, 284345 என்ற தொடா்பு எண்கள் வெளியிடப்பட்டன. இந்த எண்களில் தொடா்புகொண்டு உதவி கோருவோரின் முகவரி குறிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தகவல் அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி, அந்தந்த காவல் நிலையத்திலுள்ள பொறுப்பு அலுவலா்கள் சம்பந்தப்பட்ட நபா்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகின்றனா்.
சா்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த வயதான தம்பதியினா் தொடா்பு எண்ணை தொடா்புகொண்ட நிலையில், அவா்களுக்கான மருந்துகளை காவலா்கள் வாங்கிக் கொடுத்துள்ளனா். மேலும், காய்கறி, மளிகைப் பொருள்களையும் வாங்கிக்கொடுத்து உதவி செய்து வருகின்றனா். இதுவரையில் சுமாா் 35 போ் இந்த எண்ணை தொடா்புகொண்டு உதவி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.மேலும், பல்வேறு பகுதிகளில் காவல் துறை சாா்பில் உணவு வழங்கும் முகாம்களையும் காவல் துறையினா் நடத்தி வருகின்றனா். இவ்வாறு, கரோனா காலத்தில் கடலூா் மாவட்டக் காவல் துறையினா் தங்களது காவல் பணிக்கு இடையிலும் சேவையாற்றி முன்னோடியாக திகழ்வது பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.