0 0
Read Time:3 Minute, 22 Second

கடலூர் மாவட்டத்தில் கொரோனோ 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தற்போது தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதற்கிடையில் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு முதலில் முன்களப் பணியாளர்களுக்கும், பிறகு 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உள்ளவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இது வரை கடலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 92 ஆயிரத்து 327 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.இதில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 284 பேர் கோவிஷீல்டும், 33 ஆயிரத்து 43 பேர் கோவாக்சின் தடுப்பூசியும் போட்டுள்ளனர். முதல் டோஸ் (தவணை)  1 லட்சத்து 44 ஆயிரத்து 156 பேரும், 2-வது டோஸ் 44ஆயிரத்து 171 பேரும் தடுப்பூசி போட்டிருந்தனர்.ஆனால் அரசு ஆஸ்பத்திரிகளில் கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் ஆஸ்பத்திரிகளுக்கு வந்து தடுப்பூசி போட முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வந்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்திற்கு கோவாக்சின் தடுப்பூசிகள் வந்தது.

இது பற்றி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது மாவட்டத்துக்கு 5 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தது. அதை கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம் ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளுக்கும், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.ஆனால் கோவாக்சின்  ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு 2-வது டோஸ் தடுப்பூசிக்காக காத்திருப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து போட்டு வருகிறோம்.  கூடுதலாக தடுப்பூசி வந்த பிறகு முதல் டோஸ் தடுப்பூசி போடப்படும் என்றார். ஆனால் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு 500 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இவை அனைத்தும் நேற்றே முடிவடைந்தது. இதனால் கூடுதலாக தடுப்பூசி கேட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %