நடிகர் விஷால் மீது பாஜகவைச் சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் பாலியல் குற்றசாட்டை வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை பிஎஸ்பிபி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சென்னையை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பல தரப்பில் இருந்து கண்டன குரல்கள் எழுந்து வரும் நிலையில் நடிகர் விஷால் இதுதொடர்பாக ட்வீட்டியிருந்தார்.
விஷால் ட்விட்டர் பதிவில், ” சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் என்னை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த பள்ளியை மூட வேண்டும் என்பதை உணர்த்துகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் இதுவரை பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கேட்கவில்லை, இதுபோன்ற குற்றங்களுக்கு மிகவும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எனது நண்பர் அன்பில் மகேஷை வலியுறுத்துகிறேன்” என இவ்வாறு தனது பதிவில் கூறியிருந்தார்.
நடிகர் விஷாலின் இந்த கண்டன பதிவு பெரும் கவனத்தை ஈர்த்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் விஷால் மீது பாலியல் குற்றசாட்டை வைத்துள்ளார். அது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பதிவில், ” சினிமா துறையில் இருக்கும் விஷால் முதலில் அங்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தலை கண்டிக்க வேண்டும். சினிமாவில் புதிதாக அறிமுகமாகும் பெண்களுக்கு என்ன நடக்கிறது என்பதை கவனியுங்கள். பெண் முன்னணி நடிகர்கள் மீதான துன்புறுத்தல்களை பாருங்கள். நடிகைகைகளை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் வழக்கத்தில் இருந்து நீங்களும் உங்களது நண்பர்களும் வருகிறீர்கள்.
உங்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திரைப்பட தொழில்துறை பெண்களுக்கு உங்கள் உதவி தேவைப்படும்போது நீங்கள் உங்களது வீரத்தை காட்டியிருக்க வேண்டும். தி.க. மற்றும் சுவிசேஷகர்களால் இந்துக்கள் மிரட்டப்படுவது உங்களது தெரியுமா? உண்மையில் உங்கள் தொடர்ச்சியான அணுகுமுறையின் காரணமாக நடிகைகள் உங்களை கண்டால் ஓடுகின்றனர். அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்” என இவ்வாறு அதில் காயத்ரி ரகுராம் காட்டமாக கூறியுள்ளார்.
பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லை விஸ்வரூபம் எடுத்த பின்னர் பள்ளி தரப்பில் இருந்து எந்த மன்னிப்பும் கேட்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னரும் பாதிக்கப்பட்ட மாணவிகளிடமோ, பெற்றோர்களிடமோ எவ்வித வருத்தமும் பள்ளி நிர்வாகம் தெரிவிக்கவில்லை. மேலும், இந்த சம்பவத்தின் வாயிலாக தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில் நடந்துள்ள பாலியல் தொல்லைகளை குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தைரியமாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில், பள்ளியின் நற்பெயர் கெட்டுவிட கூடாதென்பதிலும், பள்ளியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட கூடாது என்பதிலும் குறியாக இருப்பவர்கள் பாலியல் குற்றசாட்டை வேறு கோணத்தில் திசை திருப்புவதாக விமர்சனங்கள் எழுகின்றன. மேலும், நடிகர் விஷால் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருந்தால் அது தனக்கு தெரிய வந்த போதே ஏன் அதுகுறித்து காயத்ரி ரகுராம் பேசவில்லை என்றும் தற்போது அதுகுறித்து பேச என்ன காரணம் என்றும் நெட்டிசன்கள் அந்த ட்வீட்டுக்கு கேள்வி கேட்டு வருகின்றனர்.