விருத்தாசலத்தில் கடலூர் சாலையில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. ஊரடங்கு உத்தரவின் காரணமாக இந்த மார்க்கெட் தற்போது மூடப்பட்டிருந்தது. ஆனால் ஒருசில வியாபாரிகள் விதிமுறைகளை மீறி தினசரி கடைகளை திறந்து வைத்து வழக்கம் போல் வியாபாரம் செய்து வந்தனர்.இதனால் பொதுமக்கள் காய்கறிகள் வாங்க செல்கிறேன், இறைச்சி வாங்க செல்கிறேன் என போலீசாரிடம் கூறி விட்டு மார்க்கெட்டுக்கு சென்று வந்த வண்ணம் இருந்தனர். மேலும் மார்க்கெட் அமைந்துள்ள காட்டுக்கூடலூர் சாலை என்னேரமும் பரபரப்பாக காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று நகராட்சி ஆணையாளர் அசோக் குமார், துப்புரவு அலுவலர் முத்து கணேஷ், துப்புரவு ஆய்வாளர் சாம் கர்னல் மற்றும் நகராட்சி அலுவலர்கள் விருத்தாசலம் மார்க்கெட்டில் திறந்திருந்த 3 காய்கறி கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனர்.
மேலும் மார்க்கெட்டில் காய்கறி கடைகளை திறந்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களை எச்சரித்தனர்.
இதேபோல நகராட்சி அதிகாரிகள் விருத்தாசலம் பாலக்கரை பகுதியில் அனுமதியின்றி திறந்திருந்த ஒரு மளிகை கடைக்கும், கடலூர் சாலையில் திறந்திருந்த ஒரு பேக்கரிக்கும் ‘சீல்’ வைத்தனர்.