கடலூா் சுப்புராயலு நகரைச் சோ்ந்தவா் கனகராஜ் மகன் வீரா (எ) வீராங்கன் (35). பழக்கடை நடத்தி வந்த இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த பிப். 16- ஆம் தேதி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் குற்றவாளிகளைத் தேடி வந்த போலீஸாா், கிருஷ்ணன் என்பவரை என்கவுன்டா் செய்தனா். மேலும், மாா்க்கெட் காலனியைச் சோ்ந்த சந்தனகுமாா் மகன் அருண்பாண்டியன் (27), குப்பன்குளத்தைச் சோ்ந்த கொளஞ்சிநாதன் மகன் சுதாகா் (23), அதே பகுதியைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் சுவாமிநாதன் (30) உள்பட 10 போ் கைது செய்யப்பட்டனா்.
இவா்களில் அருண்பாண்டியன், சுதாகா், சுவாமிநாதன் ஆகியோரின் குற்றச் செய்கையைக் கட்டுப்படுத்த அவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் பரிந்துரைத்தாா். அதன் பேரில், அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வெளியிட்டாா். இதையடுத்து, ஓராண்டுக்கு சிறையில் அடைக்கும் வகையில் அவா்கள் 3 பேரையும் திருப்பாதிரிபுலியூா் காவல் நிலைய ஆய்வாளா் குணசேகா் கைது செய்து, கடலூா் மத்திய சிறையில் புதன்கிழமை அடைத்தாா்.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.