மருமகளை பழிவாங்க கட்டிப்பிடித்து கொரோனாவை பரப்பிய மாமியார் – தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்!.
தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாமியார் ஒருவர் பழிவாங்கும் விதமாக தமது மருமகள் மற்றும் பேரக்குழந்தையை கட்டிப்பிடித்து தொற்றை பரப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிர்சில்லா மாவட்டம் நெமலிகுட்டா பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அடிக்கடி மாமியாருக்கும் இவருக்கும் தகராறு ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வந்தது.
இந்த நிலையில் மாமியாருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று ஏற்பட்டது. வீட்டு தனிமையில் இருந்து வரும் மாமியாரிடம் மருமகள் சமூக விலகலை கடைப்பிடித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாமியார் தனது மருமகளையும் பேரக்குழந்தையையும் பாசத்துடன் கட்டிப்பிடிப்பது போல் நடித்து கொரோனா நோயை பரப்பியுள்ளார். இதனால் தொற்று பாதிக்கப்பட்ட மருமகளை வீட்டை விட்டு துரத்தியுள்ளார். மாமியாரின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த மருமகள் வேறு வழியில்லாமல் வீட்டை விட்டு வெளியேறி தனது சகோதரர் வீட்டிற்கு சென்று தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கடந்த 7 மாதங்களாக ஒடிசாவில் ஒப்பந்த ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.