திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணம். தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
“அதில் திருநங்கைகள் அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பு பாராட்டி வரவேற்கத்தக்கது.பொது வெளியில் உரிய அங்கீகாரம் கிடைக்காமல், பொருளாதார சுயசார்பு இல்லாமல் தினந்தோறும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திருநங்கைகள் குறித்து அரசு யோசித்திருப்பதையே மிகவும் மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
திருநங்கைகள் நல வாரியம் மூலம் மாநிலம் முழுவதும் மாவட்டவாரியாக கணக்கெடுத்து அவர்களுக்கு அடையாள அட்டை, 40 வயதிற்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை, தொழில் செய்ய விரும்புவோர்க்கு 50 ஆயிரம் நிதி ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்நிலையில் அவர்களது பயணங்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பினை வரவேற்கிறோம்”.
என இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.