`தீபாவளி வரை ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு, தானிய விநியோகம்!’-பிரதமர் மோடியின் முழு உரை தொகுப்பு அனைத்தும் உள்ளே!.
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடன் உரையாற்றினார். அதன் முக்கிய அம்சங்களின் தொகுப்பு..!
`தீபாவளி வரை ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு!’
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “தீபாவளி வரை ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு, தானிய விநியோகம் செய்யப்படும். நவம்பர் மாதம் வரை 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் பொருட்கள் கிடைக்கும்” என்றார்.
`மாநிலங்கள் நாங்கள் ஏன் தடுப்பூசியை தயாரிக்கக் கூடாது என கேள்வி எழுப்புகின்றனர்”
பிரதமர் மோடி, “மாநிலங்கள் நாங்கள் ஏன் தடுப்பூசியை தயாரிக்கக் கூடாது என கேள்வி எழுப்புகின்றனர். மத்திய அரசு தடுப்பூசி தயாரிப்பில் மாநிலங்களுக்கான விதிகளை வகுத்துள்ளது அதன்படியே செயல்படுகிறோம். நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசி குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்.
கொரோனா தடுப்பூசி விநியோகத்தை மத்திய அரசு முழுமையாக நடத்தும். தடுப்பூசி விநியோகத்தில் இனி மத்திய அரசு முடிவெடுக்கும். மாநிலங்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று முற்றிலும் இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்படும். கொரோனா தடுப்பூசிகளுக்காக மாநிலங்கள் இனி செலவழிக்க தேவை இல்லை. வரும் ஜூன் மாதம் 21 -ம் தேதி புதிய தடுப்பூசி கொள்கை அமலுக்கு வரும்” என்றார்,
விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி!
பிரதமர் மோடி, “இந்தியாவில் ஒரே ஆண்டில் இரண்டு தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். மேலும் மூன்று தடுப்பூசிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு அதுவும் விநியோகிக்கப்படும். 3 தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையில் இருக்கின்றன. வரும் நாட்களில் கொரோனோ தடுப்பூசிகளை விநியோகம் செய்வது அதிகரிக்கப்படும். கொரோனா தடுப்பு சொட்டு மருந்து விரைவில் வரும். தடுப்பூசி தட்டுப்பாடு விரைவில் தீரும்” எனவும் பிரதமர் மோடி அறிவித்து இருக்கிறார்.
தொடர்ந்து, “விரைவில் நாட்டின் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். மிகக் குறுகிய காலத்தில் தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு செலுத்தி வருவது இந்தியாவின் சாதனை. இந்தியாவில் உள்ள முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தி இருக்கிறோம். தடுப்பூசி கண்டுபிடிக்கும் முன்பே தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றினார்கள் முன்கள பணியாளர்கள்” என்றார்.
`100 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு…!’
பிரதமர் மோடி, “உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா நோய் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 100 ஆண்டுகளில் இல்லாத, மிகப்பெரிய அளவில் நோய் தொற்று உலக மக்களைப் பாதித்து வருகிறது. மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. நாட்டில் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்ததை கண்டோம். கொரோனா காரணமாக, நாட்டில் மருத்துவ வசதியை இன்னும் அதிகபடுத்தி இருக்கிறோம். நம் சக்தியை கொண்டு நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனை கொண்டு சென்றோம்” என்றார்.