மயிலாடுதுறையில் பள்ளியில் படித்தபோது பாலியல் தொந்தரவு அளித்ததாக கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், மயிலாடுதுறையில் அரசு உதவிபெறும் டிபிடிஆர் தேசிய மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2010-ஆம் ஆண்டு 6-ஆம் வகுப்பு முதல் 2018-ஆம் ஆண்டு, 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். விளையாட்டில் ஆர்வம் உள்ள இந்த மாணவி பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரையிடம் பயிற்சி பெற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்நிலையில், உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை பலமுறை இரட்டை அர்த்தத்தில் பேசி, உடல் ரீதியாக சீண்டியதோடு, 2018-ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை புகார் அளித்தார்.
இதையடுத்து, மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் அண்ணாதுரையை கைது செய்து கடந்த 3 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து, அந்த ஆசிரியர் தங்களுக்கும் பாலியல் தொந்தரவு அளித்ததாக மேலும் 2 மாணவிகள் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, மேலும் இரண்டு மாணவிகளின் சாட்சிகளை கொண்டு அனைத்து மகளிர் போலீசார் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரையை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.