தமிழகத்தில் நேற்று முதல் சில தளர்வுகளுடனான ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையடுத்து விருத்தாசலத்தில் மளிகை, காய்கறி உள்ளிட்ட பல்வேறு கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டு, கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளுடன் இயங்கின. தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளில் குறிப்பிடாத கடைகளும் விருத்தாசலம் நகரத்தில் திறந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் விருத்தாசலம் தாசில்தார் சிவக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களை எச்சரிக்கை செய்து, வழிகாட்டு நெறிமுறைகளை மீறி கடைகளை திறந்ததாக கூறி அந்த கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனர். அதன்படி, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் திறக்கப்பட்டு இருந்த ஒரு பேன்சி ஸ்டோர், பீடா ஸ்டால், தென் கோட்டை வீதியில் திறந்திருந்த 2 செல்போன் கடைகள், ஒரு பாத்திரக் கடை, கடைவீதியில் ஒரு செல்போன் கடை, ஜங்க்ஷன் சாலையில் அனுமதியின்றி திறந்திருந்த 2 செல்போன் கடைகள் என மொத்தம் 8 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.