ஊரடங்கின்போது கடன் தவணையை செலுத்தக்கோரி பொதுமக்களை கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
கொரோனா பொதுமுடக்கத்தின்போது நுண்நிதி நிறுவனங்கள் கடன் தொகையை வசூலிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் நுண் நிதிநிறுவன அதிகாரிகள், மகளிர் திட்ட அதிகாரிகள், பல்வேறு வங்கிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய ஆட்சியர் பாலசுப்ரமணியம், கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு நடவடிக்கைளால் பொதுமக்கள் பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், வருமானமின்றி நடுத்தர, ஏழை – எளிய மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் கூறினார். இதனால் தொழிற்கடன், தொழில் சார்ந்த விவசாய கடன், சுய உதவிக்குழு கடன்களுக்கு தவணை செலுத்த முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவித்தார்.
இதனை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின் படி, வங்கிகள் கடன் தவணையை மாற்றியமைப்பது, தவணை நீட்டிப்பு செய்வது, உற்பத்தி பாதித்த பயனாளிகளுக்கு புதிய கூடுதல் நடைமுறை கடன் வழங்க முன்வர வேண்டும் என ஆட்சியர் பாலசுப்ரமணியம் கேட்டுக்கொண்டார்.
அதேபோல், அமைப்புசாரா சிறு முதலீட்டு தொழில் செய்பவர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் அதிகளவில், சிறு கடன்களை நுண்நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளதாக கூறிய ஆட்சியர், மாவட்டத்தில் சில இடங்களில் கடன் பெற்றவர்களிடம் கட்டாய வசூல் என்ற முறையில் பல இன்னல்களை சந்திப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும் கூறினார்.
எனவே, கொரோனா காலத்தில் நுண்நிதி நிறுவனங்கள் கட்டாய கடன் வசூல் செய்வதோ அல்லது மக்களை கட்டாயப்படுத்தி அழுத்தம் கொடுக்கவோ, துன்புறுத்தவோ கூடாது என்று அறிவுறுத்திய ஆட்சியர், கட்டாய வசூல் நடைபெற்றால், குறிப்பிட்ட நுண்நிதி நிறுவனம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.