டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக நாளை திருச்சி செல்லும் முதல்வர், நாளை மறுதினம் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவைக்கிறார்.
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.நடப்பாண்டும் அதே காலகட்டத்தில் தண்ணீர் திறக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று சமீபத்தில் அறிவித்தார்.
இதையடுத்து, அவரே நேரில் சேலம் மாவட்டம் மேட்டூர் சென்று வரும் 12-ம் தேதி பாசனத்துக்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை காலை சென்னையில் இருந்து திருச்சி செல்லும் முதல்வர் கல்லணை பகுதிகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளைப் பார்வையிடுவதுடன், டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர் திருச்சியில் ஓய்வெடுக்கும் அவர், நாளை மறுதினம் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையைப் பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலாசனை நடத்துகிறார். காலை 10.45 மணிக்கு மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவைக்கிறார். பின்னர் முதல்வர் சென்னை திரும்புகிறார்.