விருத்தாசலம்,
கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கார்மாங்குடியில் 40 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு வெள்ளாற்றின் குறுக்கே உள்ள பெலாந்துறை அணைக்கட்டில் இருந்து வாய்க்கால் மூலம் தண்ணீர் வரும். ஆனால் இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் கிடக்கிறது.
இதனால் அணைக்கட்டில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் விவசாயிகளுக்கு முழுமையாக கிடைக்காமல் இருந்து வருகிறது. எனவே இந்த வாய்க்காலை தூர்வார வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில் பெரிய ஏரியில் இருந்து பாசனத்துக்கு செல்லும் வாய்க்காலில் பொதுப்பணித்துறையினர் தூர்வாரும் பணியை தொடங்கினர். இதுபற்றி அறிந்த அப்பகுதி விவசாயிகள் ஏரிக்கு தண்ணீர் வரத்து கொடுக்கும் வாய்க்காலை தூர் வாராமல் பாசன வாய்க்காலை மட்டும் தூர்வாரி சிறிதளவு தேங்கும் தண்ணீரைக்கூட வெளியேற்றினால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயநிலை ஏற்படும்.
மேலும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரிக்கு தண்ணீர் சரியான முறையில் வராமல் முழு கொள்ளளவை எட்டாத நிலையில் இருந்து வருகிறது. இதனால் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இதனால் ஏரிக்கு தண்ணீர் வரத்து கொடுக்கும் வாய்க்காலை தூர் வாரி அதன்பிறகு பாசன வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கார்மாங்குடி பாசன வாய்க்காலை தூர்வாரும் பணியை விவசாயிகள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சமாதானப்படுத்தி உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடந்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.