மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கும் திட்டத்தில் அதிமுக அரசை விட நாளொன்றுக்கு 30 லட்சம் ரூபாய் மிச்சப்படுத்தியுள்ளோம் – அமைச்சர் மா.சுப்ரமணியன்!
தமிழகத்தில் 36 மாவட்டங்களில் தடுப்பூசி கையிருப்பு இல்லை என்றும், சென்னையில் மட்டும் ஆயிரம் தடுப்பூசிகள் உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பிரபல உணவகங்கள் மூலம் உணவு வழங்கும் திட்டத்தில் இடைத்தரகர்களை ஒழித்து தினமும் ரூபாய் 30 லட்சம் மிச்சப்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன், ஜூன் மாதத்திற்கான தடுப்பு மருந்துகளை மத்திய அரசு அனுப்பினால் மட்டுமே, தமிழகத்தில் இனி தடுப்பூசி செலுத்த முடியும் என்றார். கடந்த அதிமுக ஆட்சியில் பிரபல உணவகங்களில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நாளொன்றுக்கு, நபர் ஒருவருக்கு 600 ரூபாய் செலவழித்து உணவு வழங்கப்பட்டது என்றும், இடைத்தரகர் முறையை ஒழித்து தற்போது அதே உணவை குறைவான விலையில், அதே உணவகங்களில் இருந்து பெற்று தருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார். இதன் மூலம் தமிழக அரசுக்கு ஒரு நாளைக்கு 30 லட்சம் ரூபாய் மிச்சமாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.