இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் லிட்டர் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டர் 97.19 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.42 ரூபாய்க்கும் விற்பனை.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பெட்ரோல் பங்குகளில் நீங்கள் பணம் செலுத்தும்போது, மோடி அரசின் பணவீக்க உயர்வை உணர்வீர்கள். வரி வசூல் தொற்று அலைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன’ என்று குற்றம்சாட்டியிருந்தார்.
அதேபோல், காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நாடு ஒருபேரழிவை சந்தித்துள்ள போது மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளனர். பின்னர் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரி மூலம் 2.5 லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது’ என தெரிவித்தார்.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய அளவில் இன்று போராட்டம் நடைபெற உள்ளது. பெட்ரோல் நிலையங்கள் (பங்க்குகள்) முன்பு இந்த போராட்டம் நடைபெற உள்ளது. தேசிய, மாநில, மாவட்ட அளவில் பெட்ரோல் நிலையங்கள் முன் போராட்டங்களை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
தலைநகர் டெல்லியில் இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை பெட்ரோல் நிலையங்கள் முன் போராட்டம் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத்தலைவர்கள் பங்கேற்ற்க உள்ளனர்.