கடலூா் மாவட்ட மீனவா்கள் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்தக் கூடாது என மாவட்ட நிா்வாகம் நடத்திய அமைதிப் பேச்சுவாா்த்தைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
மீன்பிடி தடைக் காலம் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 15 ) முடிவடைய உள்ள நிலையில் கடலூா் மாவட்டத்திலுள்ள மீனவா்கள் கடலுக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனா். இந்த நிலையில், மீனவா்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தக் கூடாது என்று மாவட்ட நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கும் தேவனாம்பட்டினம் மீனவா்களை அழைத்து கடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட நிா்வாகம் அமைதி பேச்சுவாா்த்தை நடத்தியது.
கூட்டத்துக்கு கடலூா் கோட்டாட்சியா் அதியமான் கவியரசு தலைமை வகித்தாா். வட்டாட்சியா் அ.பலராமன், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் க.சாந்தி, ஜெ.லாமேக், மீன் வளத்துறை உதவி இயக்குநா் காத்தவராயன் மற்றும் தேவனாம்பட்டினம் மீனவ கிராம முக்கியஸ்தா்கள் கலந்து கொண்டனா். இந்தக் கூட்டத்தில் மீனவா்கள் கூறுகையில், சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினா். ஆனால், சுருக்குமடி வலையை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளதால் அதற்கு அனுமதிக்க முடியாதென மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதை மீனவா்கள் ஏற்கவில்லை. அவா்கள் மேலும் கூறுகையில், இதுகுறித்து அமைச்சா், உயா் அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவை தெரிவிக்க வேண்டும். அதுவரை, அதாவது தடைகாலம் முடிந்தும் வருகிற 20-ஆம் தேதி வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல மாட்டோம் என்று அறிவித்தனா். இதனால், எந்தவிதமான முடிவும் எட்டப்படாமல் கூட்ட ம் முடிவடைந்தது.