விருத்தாசலம் வேடப்பர் கோவிலில் இருந்து கருவேப்பிலங்குறிச்சி வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு காப்புக்காடு அமைந்துள்ளது. இந்த காப்புக்காடு பகுதியில் நகர பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் காப்புக்காட்டில் உள்ள மரக்கிளைகளில் கொரோனா வார்டில் பயன்படுத்தப்படும் முழு கவச உடைகள், முக கவசங்கள் ஆகியன தொங்கி கொண்டு கிடக்கின்றன. மேலும் சில இடங்களில் மருத்துவ கழிவுகளும் குவியல், குவியலாக கிடக்கிறது.
பிளாஸ்டிக் கழிவுகளும், படுக்கை விரிப்புகள், தலையணை மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டி குவிக்கப்படுகிறத. அதுமட்டுமின்றி விருத்தாசலம் நகர குடியிருப்பு பகுதிகளில் அள்ளப்படும் செப்டிக் டேங்க் கழிவுகள் காப்புக் காடு அருகே சாலையோரங்களில் கொட்டப்படுகிறது. இதனை நகராட்சி நிர்வாகமும், வனத்துறையினரும் கண்டுகொள்ளவில்லை.
இதனால் காப்புகாட்டில் வசிக்கும் குரங்கு, மான் உள்ளிட்ட வன விலங்குகளுக்கும் நோய் தொற்று பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு சிலர் மருத்துவ கழிவுகளையும், குப்பைகளையும் தீ வைத்து எரித்து செல்வதால், அந்த பகுதியே புகை மண்டலமாக, மாறி அந்த சாலையில் விபத்துகள் நடக்க வழிவகுக்கிறது.
விருத்தசாலம் நகரில் நகராட்சி வாகனங்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் வடவாடி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. ஆனால் சமீபகாலமாக ஆங்காங்கே திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. குறிப்பாக விருத்தாசலம்-பெண்ணாடம் செல்லும் சாலையில் சித்தலூர் சுடுகாடு அருகே ஆலிச்சிக்குடி செல்லும் வழியில் புறவழிச்சாலை பகுதி போன்ற இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
இது நோய்த்தொற்று பரவலுக்கான ஆரம்ப புள்ளியாகும். இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலரின் கோரிக்கையாகும். இந்த கோரிக்கை நிறைவேற்றப்படுமா?, பொறுத்திருந்து பார்ப்போம்.