மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா நச்சினார்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் செல்லதுரை. இவருடைய மகன் தீபக் (வயது 11). 6-ம் வகுப்பு படித்து வந்த இவன், அந்த பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் பின்புறம் சிற்றாறு வடிகால் வாய்க்காலில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தான். வாய்க்காலில் மணல் எடுத்த பள்ளத்தில் தீபக் விளையாடி போது மண் சரிவு ஏற்பட்டு சிறுவன் மண்ணில் சிக்கி கொண்டான்.
அவன் போட்ட சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று தீபக்கை மீட்டு குத்தாலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் தீபக் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. வாய்க்காலில் அனுமதியின்றி மணல் எடுத்தவர்கள் பள்ளத்தை மூடாததால் சிறுவன் உயிரிழந்ததாக கூறி அந்தப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சிறுவனின் தந்தை செல்லதுரை அளித்த புகாரின் பேரில் பாலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீபக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.