0 0
Read Time:3 Minute, 54 Second

கடலூர் மாவட்ட தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், முழு கல்விக் கட்டணத்தையும் செலுத்தினால் தான் அடுத்த ஆண்டு வகுப்புக்கு செல்ல முடியும் என அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு வாட்ஸ்அப்பில் ‘வாய்ஸ் மெசேஜ்’ பகிர்ந்து வருவதால் பெற்றோர் கவலையில் உள்ளனர்.

கரோனா பரவல் காரணமாக கடந்த கல்வி ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் நடத்தப்பட்டது. ஆனாலும் இணைய வழி பிரச்சினை தொடர்பாக பல மாணவர்கள் ஆன்லைன் வகுப்பை சரிவர கவனிக்க முடியாத நிலை உருவானது. மேலும், சில பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் வழங்கப் படாமலேயே ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது.

இருப்பினும் தமிழ்நாடு அரசு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததால் மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்ட தனியார் பள்ளிகளில் பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும், பள்ளி நிர்வாகம் தரப்பில் இருந்து கல்விக் கட்டணம் செலுத்துவது தொடர்பாக மாணவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ‘வாய்ஸ் மெசேஜ்’ அனுப்பப்பட்டுள்ளது. அதில் முழு கட்டனத்தையும் செலுத்த வேண்டும் என வலியுறுத்துவதோடு, முழுவதையும் செலுத்தவில்லை எனில் அடுத்த வகுப்புக்கு செல்ல முடியாது என குறிப்பிட்டுள்ளனர்.

கரோனா பொதுமுடக்கத்தால் ஏற்கெனவை வருவாய் இழப்பை சந்தித்துள்ள பெற்றோர், தற்போது முழு கட்டணத்தையும் செலுத்த முடியாத நிலையில், பள்ளி நிர்வாகங்கள் நெருக்கடி கொடுப்பது கவலை ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக விருத்தாசலத்தைச் சேர்ந்த பெற்றோர் தரப்பில் கூறுகையில், “கடந்த ஆண்டு பள்ளி நடைபெறவில்லை. மாறாக ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் வகுப்பெடுத்தனர்.

ஆனாலும் பெரிய பலனில்லை. மாறாக தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பலருக்கு கடந்த ஆண்டு முழு ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும் பள்ளிக்கு மின் கட்டணம் செலவு, பள்ளி பராமரிப்பு செலவு உள்ளிட்டவை மிச்சமாகியிருக்கும் சூழலில் பெற்றோர்களிடம் முழு கல்விக் கட்டணத்தையும் செலுத்துங்கள் எனக் கூறுவது ஏற்புடையதல்ல. எனவே அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு, கடந்த ஆண்டு கல்விக் கட்டணத்தில் 50 சதவிகிதம் மட்டுமே வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

பெற்றோர் புகார் தொடர்பாக கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலாவிடம் கேட்டபோது, “புகார் கூற விரும்பும் பெற்றோர்கள் புகாராக எழுதி வழங்கினால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %