கடலூா் வட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அதன்படி, சுத்துக்குளம், காரைக்காடு பகுதியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் குடிநீா் குழாய்கள் அமைத்து குடியிருப்புகளுக்கு குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருவதையும், பசுமை வீடுகள் கட்டும் பணி, தனி நபா் கழிப்பறைகள் கட்டும் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா். பின்னா், கரையேறவிட்டக்குப்பம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் நீா் உறிஞ்சி குழிகள் வெட்டும் பணியை அவா் ஆய்வு செய்தாா்.
அப்போது அவா், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி கட்டும் பணி, குடிநீா் குழாய்கள் இணைப்புப் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். பசுமை வீடுகள், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளைத் தொடா்ந்து கண்காணித்து குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.