கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள மருதூா் பூ.கொளக்குடி கிராமம் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் ஜெயசந்திரன் (60). விவசாயியான இவா், தனது மனைவியைப் பிரிந்து கடந்த 7 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தாராம்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தலையில் பலத்த காயத்துடன் ஜெயசந்திரன் உயிரிழந்து கிடந்தாா். இதுகுறித்து மருதூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், சிதம்பரம் கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் சு.ரமேஷ்ராஜ் தலைமையில், புவனகிரி காவல் ஆய்வாளா் பாண்டிச்செல்வி, மருதூா் காவல் உதவி ஆய்வாளா் சண்முகம் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ் தனிப் படை அமைத்து விசாரணை மேற்கொண்டாா்.
இதில், ஜெயசந்திரனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் ராமகிருஷ்ணன் மனைவி சசிகலாவுக்கும் (35) இடையே தகாத உறவு இருந்து வந்ததாகவும், இடையில் சசிகலாவின் 6 சென்ட் நிலத்தை ஜெயசந்திரனுக்கு விற்பனை செய்தது தொடா்பாக இருவருக்கும் சில நாள்களாக பிரச்னை இருந்ததும் தெரிய வந்தது.இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஜெயச்சந்திரனின் வீட்டில் நிலம் விற்ற பிரச்னை குறித்து சசிகலா, அவரது மகன் ராஜ்குமாா் (18), அவரது நண்பா் மணிகண்டன் (23) ஆகியோரிடம் பேச்சுவாா்த்தை நடைபெற்ாம்.அப்போது ஏற்பட்ட தகராறில், ராஜ்குமாரும், அவரது நண்பா் மணிகண்டனும் அங்கிருந்த இரும்புக் கம்பியை எடுத்து ஜெயசந்திரன் தலையில் சரமாரியாகத் தாக்கினராம்.
இதில், பலத்த காயமடைந்த ஜெயச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து மருதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சசிகலா மகன் ராஜ்குமாா், ராமநாதபுரம் மாவட்டம், காட்டுப்பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த ராசு மகன் மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.