மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை வளாகத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்கலன்களை அமைச்சர் சக்கரபாணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய வரும்போது காத்திருக்க வேண்டிய நிலை இனி இருக்காது. விவசாயிகள் எடுத்து வரும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படும்.
எருக்கூர் நவீன அரிசி ஆலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக தொடங்கப்பட்ட நெல் சேமிப்பு கொள்கலன்கள் இதுவரையில் செயல்பாடு இல்லாமல் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்து உரிய முறையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எருக்கூர் நவீன அரிசி ஆலையில் இருந்து கரித்துகள்கள் வெளியேறுவதால் சுற்றுப்புறத்தில் உள்ள வீடுகளில் படிவதுடன் சுற்றுப்புற சூழ்நிலையை மாசு படுத்துவதாக இங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு கரித்துகள் வெளியே செல்லாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். முதல் -அமைச்சர் சமீபத்தில் ஏழு திட்டங்களுக்காக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது உணவு பொருள் வழங்கல் துறைக்கு முக்கியத்துவம் அளித்து உள்ளார். இதன்மூலம் ரேஷன் கடைகளில் நுகர்வோர்களுக்கு தரமான அரிசி சரியான எடையில் வழங்கப்படும் என்றார். உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் ஆனந்தகுமார், மயிலாடுதுறை கலெக்டர் லலிதா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதாமுருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன், மயிலாடுதுறை உதவி கலெக்டர் நாராயணன், சீர்காழி தாசில்தார் சண்முகம் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.