கும்பகோணம்: கல்லணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி தண்ணீர் இன்று கும்பகோணம் வந்து சேர்ந்தது. வீரசோழன் ஆற்றுத் தலைப்பில் விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர். கடந்த 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி நீரை திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து 16ம் தேதி கல்லணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கும்பகோணத்தை அடுத்த மணச்சேரிக்கு வந்தடைந்தது. மூன்று நாட்களில் 100 கிலோ மீட்டர் தூரம் கடந்து வந்துள்ள தண்ணீர், காவிரி வீரசோழன் ஆற்றுத் தலைப்பில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியேறியது.
ஆறு மற்றும் வாய்க்கால்கள் முன்னெச்சரிக்கையாக தூர்வாரப்பட்டுள்ளதால் அடுத்த 4 நாட்களில் கடைமாடையான பூம்புகாருக்கு காவிரி தண்ணீர் சென்றடைந்துவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மட்டும் 1 லட்சத்து 53 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.