மயிலாடுதுறை கேணிக்கரை சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி நள்ளிரவு திருட்டு போனது.இதேபோல் அடுத்த 2 நாட்களில் 3-ம் நம்பர் புதுத்தெருவில் வசிக்கும் மயிலாடுதுறை தீயணைப்புதுறை நிலைய அலுவலர் முத்துக்குமார் என்பவர் வீட்டு வளாகத்தில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இந்த சம்பவங்கள் தொடர்பான புகார்களின் பேரில் மயிலாடுதுறை தனிப்படை போலீசார் திருட்டுப்போன பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மயிலாடுதுறை அருகே நல்லத்துகுடி சிவன் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சண்முகம் என்கிற மணிகண்டன் (வயது 32) என்பவர் மோட்டார் சைக்கிள்களை திருடியது உறுதிப்படுத்தப்பட்டது.மேலும் மணிகண்டன் மீது மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் வாகன திருட்டு, மாடு திருட்டு, வீடுபுகுந்து திருடியது உள்ளிட்ட பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறை கிளை சிறை முன்பு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது, மோட்டார் சைக்கிள்களை திருடிய மணிகண்டன் என்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். விசாரணையில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் மீன்சுருட்டியில் விற்பனை செய்தது தெரியவந்தது.இதனையடுத்து மீன்சுருட்டி விரைந்து சென்ற போலீசார் 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து மயிலாடுதுறை போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.