மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு, தென்னலக்குடி, புதுத்துறை, திருவாலி மண்டபம், திருச்சம்பள்ளி, திருவெண்காடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் கோடைகால பயிரான தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டது.3 மாத கால பயிரான தர்பூசணி மழையின் காரணமாக இந்த ஆண்டு தாமதமாக சாகுபடி செய்யப்பட்டது. இதனால் பெரும்பாலான வியாபாரிகள் வெளி மாநில தர்பூசணியை கொள்முதல் செய்து விற்பனையை தொடர்ந்தனர்.
காலதாமதமாக தொடங்கிய தர்பூசணி சாகுபடி நல்ல விளைச்சல் கண்டு அறுவடைக்கு தயாரான நிலையில் கொரோனா தொற்று 2-வது அலை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஓரு மாதம் கடந்தும் தொடரும் ஊரடங்கால் தர்பூசணி விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் விற்பனையாளர்கள் கொள்முதல் செய்யவில்லை.
உள்ளூர் விற்பனையாளர் முதல் வெளி மாவட்ட விற்பனையாளர்களும் தர்பூசணி கொள்முதல் செய்ய முன்வராததால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர். தற்போதைய நிலையில் ஆள் வைத்து பறித்தால் கூலி கொடுக்கக்கூட முடியாத நிலை ஏற்படும் என்பதால் பலர் தர்பூசணி பழங்களை அறுவடை செய்யாமலே விட்டனர்.
இந்த நிலையில் மேட்டூர் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நெல் சாகுபடி பணிக்கு தயாரான சில விவசாயிகள் விளைந்த தர்பூசணி பழங்கள் மற்றும் கொடிகளை டிராக்டர் கொண்டு உழுது வயலுக்கே மீண்டும் உரமாக்கி வருகின்றனர்.கொரோனா ஊரடங்கு தர்பூசணி சாகுபடி செய்த விவசாயிகளின் மூன்று மாத உழைப்பின் பலனை அவர்களின் வயலுக்கே உரமாக்கியது விவசாயிகளை கவலையடைய வைத்துள்ளது.எனவே அரசு பாதிக்கப்பட்ட தர்பூசணி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.