கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ஸ்ரீநெடுஞ்சேரி காலனி தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன் மகன் தேவராஜன் (வயது 22). தொலைதூரக்கல்வி மூலம் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் இருக்கும் சாவடிக்குப்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தேவராஜன் கடந்த 19-ந்தேதி காதலியை பார்க்க சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும், அவர் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் சாவடிக்குப்பத்தில் விநாயகபுரம் சாலையில் உள்ள கல்லறைத் தோட்டத்திற்கு அருகே தேவராஜனின் மோட்டார் சைக்கிள் நின்றதை அவரது உறவினர்கள் பார்த்தனர். அந்த பகுதியில் தேடி பார்த்த போது, அங்குள்ள ஒரு கிணற்றுக்கு அருகே இருக்கும் மரத்தடியில் தேவராஜன் அணிந்து சென்ற வேட்டி, கண் கண்ணாடி, செருப்பு, செல்போன், மோட்டார் சைக்கிள் சாவி ஆகியன கிடந்தது.
இதனால், தேவராஜனை அடித்து கொன்று, அருகில் உள்ள கிணற்றில் மர்ம மனிதர்கள் வீசி இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இதுபற்றி ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தனர்.
இதையடுத்து போலீசார் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கிணற்றில் கிடந்த தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று காலை வரையில் இப்பணி நடந்த நிலையில் அந்த கிணற்றில் தேவராஜன் கிடைக்கவில்லை. இந்நிலையில் அருகே உள்ள மற்றொரு கிணற்றில் நாய்கள் ஒன்று சேர்ந்து குரைத்தது. இதைபார்த்த முதியவர் ஒருவர், அங்கு சென்று பார்த்தபோது தேவராஜன் தண்ணீரில் பிணமாக மிதந்தார். இதையடுத்து சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வினதா ஆகியோர் விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தேவராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் தேவராஜனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரது காதலியின் வீட்டை முற்றுகையிடுவதற்கு திரண்டு சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து அவர்களை சமாதானம் செய்தனர். மேலும் தேவராஜன் காதலித்ததாக கூறப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்யக்கோரி, ஸ்ரீநெடுஞ்சேரியை சேர்ந்தவர்கள் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, பிரேத பரிசோதனை முடிவில் தேவராஜன் கொலை செய்யப்பட்டதற்கான முகாந்திரம் இல்லை. எனவே சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்யப்படுவதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதை தேவராஜனின் குடும்பத்தினர் ஏற்க மறுத்து, கொலை வழக்காக பதிவு செய்து, தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் அப்போது தான் உடலை பெற்று கொள்வோம் என்று கூறி உடலை வாங்க மறுத்துவிட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.