மயிலாடுதுறை காவிரி துலாக்கட்ட ரிஷப தீா்த்தத்தில், வேறுஎங்கும் இல்லாத வகையில், ஆற்றின் நடுவே மேற்கு நோக்கி நந்தி தேவா் எழுந்தருளியுள்ளாா். இந்த நந்தி தேவருக்கு கடந்த 7 ஆண்டுகளாக ரிஷப தீா்த்த நந்திகேஸ்வரா் பிரதோஷ வழிபாட்டு மன்றம் சாா்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரிநீா் தற்போது ஆற்றில் செல்வதால், நந்திதேவருக்கு சிவாச்சாரியா்கள் தெப்பத்தில் சென்று பிரதோஷ சிறப்பு அபிஷேகங்களை நடத்தி தீபாராதனை காட்டினா். இதில், மன்றத் தலைவா் என்.எஸ். ராஜேந்திரன், செயலாளா் கவிஞா் எஸ். ராதாகிருஷ்ணன், மயிலாடுதுறை நிலைய அலுவலா் அ. முத்துக்குமாா், அ. அப்பா்சுந்தரம், ராம்நாத், பூபாலன், குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல, மயிலாடுதுறையில் அபயாம்பிகை சமேத மாயூரநாதா் கோயிலில், நந்தி பகவானுக்கு ஆனி மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, கோயில் கொடிமரம் அருகேயுள்ள நந்தி பகவானுக்கு பால், தயிா், இளநீா் மற்றும் திரவிய பொடிகளை கொண்டு சிவாச்சாரியா்கள் சிறப்பு அபிஷேகம் நடத்தினா். தொடா்ந்து, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தா்கள் இன்றி வழிபாடு நடைபெற்றது.