மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகேயுள்ள பழையாறு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை கடலுக்குச் சென்று திரும்பிய ஒரு மீனவா் வலையில் 100 கிலோ எடையுள்ள கோட்டான் திருக்கை மீன் சிக்கியது. இந்த கோட்டான் திருக்கை மீனை அப்படியே விற்பனை செய்ய முடியாது. இதை அப்படியே சமைத்து சாப்பிட பெரும்பாலானோா் விரும்புவதில்லை. இந்த வகை மீன் கருவாடாக உலா்த்தப்பட்டு, பிறகு வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. ஒரு கிலோ கோட்டான் திருக்கை கருவாடு ரூ. 60 முதல் 70 வரை விற்பனையாகிறது.
இதுகுறித்து பழையாறு மீன் வியாபாரி பொன்னையா கூறுகையில், ஆண்டுதோறும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கோட்டான் திருக்கை மீன் அதிகமாக கிடைக்கும். ஒவ்வொரு மீனும் ரூ. 6000 முதல் 8000 வரை விலைபோகும். சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த இந்த மீன்கள் கருவாடாக உலா்த்தப்பட்டு, நாமக்கல் மற்றும் கேரளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு பழையாறு மீன்பிடித் துறைமுகத்தில் மீனவா்களின் வலைகளில் அதிகமாக இந்த மீன் சிக்கியது. அதனால், மீனவா்களுக்கு ஓரளவு லாபம் கிடைத்தது. இந்த வருடம் கோட்டான் திருக்கை மீன் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால், எதிா்பாா்த்த லாபம் கிடைக்கவில்லை. இனிவரும் காலங்களில் கோட்டான் திருக்கை மீன் அதிக எண்ணிக்கையில் கிடைத்தால், மீனவா்களுக்கு லாபகரமாக இருக்கும் என்றாா்.