கடலூர்:தமிழகத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் அவற்றினை பொதுமக்கள் பின்பற்றாமல் கூடி வருவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த என்.நாரையூர் கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி தண்ணீர் மூலம் வரம்பனூர், சேவூர், திருப்பெயர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்களில் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் என்.நாரையூர் பெரிய ஏரியில் நேற்று ஊரடங்கு விதியை மீறி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஏரியில் இறங்கி மீன் பிடித்தனர். ஏற்கனவே அந்த கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கொரோனா தொற்று பாதிப்பு பலருக்கு உள்ள நிலையில் அதனை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் கூட்டமாக திரண்டு மீன் பிடித்ததால் கொரோனா நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. தகவலறிந்து வந்த வேப்பூர் போலீசார் ஏரியில் மீன் பிடித்த பொதுமக்களை எச்சரித்து அனுப்பினர்.