மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஒருங்கிணைப்புடன் எஸ்.ஓ.எஸ் தொண்டு நிறுவனத்தின் சார்பில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு அடங்கிய தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் லலிதா ஐஏஎஸ் வழங்கினார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஒருங்கிணைப்புடன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் கடந்த மே 1-ஆம் தேதி முதல் தற்போது வரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 964 குழந்தைகளில் முதல் கட்டமாக மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுகாவை சேர்ந்த 406 குழந்தைகளுக்கு அவரவர்களின் வீடுகளுக்கே சென்று சிறுதானிய சத்துமாவு, பேரிச்சம் பழம், தேன், சிவப்புக் கொண்டைக்கடலை, பாதாம், பிஸ்தா, முந்திரி, ஆகியவைகள் அடங்கிய ஊட்டச்சத்து தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் லலிதா வெள்ளிக்கிழமை வழங்கி தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கிவ் இந்தியா, ஆக்சன் எய்டு அசோசியேசன் (சென்னை) மற்றும் நாகப்பட்டினம் ஸ்னேகா தொண்டு நிறுவனத்தின் சார்பில் ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான 20 ஆக்சிஜன் செறிவூட்டிலிகளை கொரோனா சிகிச்சை மையங்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பணிகளுக்காக மாவட்ட ஆட்சியரிடம் தொண்டு நிறுவனத்தினரால் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார், எஸ்.ஓ.எஸ் குழந்தை கிராம தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் கணேசன், உதவி இயக்குனர் நாராயணன், சினேகா தொண்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் கணேசன், இயக்குனர் ஜேசுரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.