0 0
Read Time:3 Minute, 28 Second

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை பரவலை தடுக்கும் வகையில் கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவால் பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டன.இதையடுத்து கடந்த மாதத்தில் தொடர்ந்து 2 வாரங்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நோய் தொற்று பரவல் குறையத்தொடங்கியது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன்படி தற்போது பெரும்பாலான கடைகள் இயங்கி வருகின்றன. கார், ஆட்டோக்களும் இயக்கப்பட்டு வருகின்றன.ஆனால் கடந்த 1 ½ மாதங்களாக அரசு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. அதனால் அந்த பஸ்கள் அனைத்தும் அந்தந்த போக்குவரத்து கழகத்திற்குட்பட்ட பணிமனைகளிலேயே பாதுகாப்பாக நிறுத்தப்பட்டன.


 இந்நிலையில் தற்போது 6-வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கானது நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணியுடன் முடிவடைய உள்ளது.இதற்கிடையே 28-ந் தேதி (நாளை) முதல் 5-ந்தேதி வரை 7-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் அரசு மேலும் சில தளர்வுகளை அளித்தது.
 இந்த தளர்வில் பொது போக்குவரத்துக்கு, அரசு அனுமதி அளித்துள்ளது. இதையொட்டி அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பஸ் போக்குவரத்தை தொடங்க போக்குவரத்துக்கழகமும் தங்களை முழுவதுமாக தயார்படுத்தியுள்ளது.  அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்களை பழுதுநீக்கி, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. 


இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக 50 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. 
இதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் நிறுத்தப்பட்டிருக்கும் சுமார் 580 பஸ்களை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து வருவதோடு பஸ்சில் ஏதேனும் பழுதுகள் இருக்கிறதா? என்பதை கண்டறிந்து அந்த பழுதுகளும் சரிசெய்யப்பட்டு வருகிறது.
 மேலும் அனைத்து பஸ்களும் முழுமையாக இயக்க வாய்ப்பில்லை. ஏனெனில் பொதுமக்கள் தற்போது உள்ள சூழ்நிலையில் பஸ்களில் பயணம் செய்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் பயணிகளின் வருகைக்கு ஏற்ப அரசு பஸ்கள் இயக்கப்படும் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %