சீர்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் கொரோனா ஊரடங்கால் கருவாடு விற்பனை மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்தத் துறைமுகத்தின் மூலம் தினந்தோறும் விசைப்படகுகள், பைபர் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இங்கு பிடிக்கப்படும் கெளுத்தி, நெத்திலி, கிழங்கான், பொறுவாய், குத்துவாய், வாழை, வெள்ளுருட்டான், கவலை, சுறா உள்ளிட்ட 13 வகையான மீன்கள் மீனாகவும், அதே நேரத்தில் கருவாடாகவும் உண்பதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வகையான மீன்களைக் கருவாடாக வாங்கி சமைத்து உண்பதையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். எனவே இங்கு பிடிக்கப்படும் மீன்களின் ஒரு பகுதி கருவாடாக உலர்த்தப்பட்டு தினந்தோறும் பல்லடம், ஒட்டன்சத்திரம்,திருச்சி, வேலூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் எடுத்துச்சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு நாளைக்கு பழையாறு துறைமுகத்திலிருந்து சுமார் 2 டன் மற்றும் அதற்கு மேலும் கருவாடுகள் வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச்சென்று விற்கப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணத்தாலும், கடந்த சில நாட்கள் மீன்பிடி தடை காரணத்தினாலும் மீன்கள் அதிகம் கிடைக்கவி்ல்லை. அதனால் கருவாடு உலர வைப்பது குறைந்தது.அதே நேரத்தில் இங்கு உலர வைக்கப்படும் கருவாடுகளை வியாபாரிகள் வாகனங்களில் வந்து வாங்க முன்வரவில்லை. கொரோனா ஊரடங்கு காரணமாக வாகனங்களில் வந்து வியாபாரிகள் கருவாடுகளை வாங்கிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுவும் கருவாடு வியாபாரத்தின் மந்த நிலைக்கு ஒரு பெரும் காரணமாக அமைந்தது.
இதுபற்றி கருவாடு வியாபாரிகள் சிலரிடம் பேசியபோது,
“ஒரு நாளைக்கு இரண்டு டன்னுக்கு மேல் இங்கு உலர்த்தப்படும் கருவாடுகள் வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கபட்டு வந்த நிலையில் தற்போது ஒரு நாளைக்கு ரூ 10,000 மதிப்பில் கூட கருவாடு விற்பனை செய்ய முடியவில்லை .வரும் காலத்தில் போக்குவரத்து சீரானால்தான் கருவாடுகள் விற்பனை ஆகும். அதுவரையில் நஷ்டம்தான். பணப்புழக்கமும் இல்லை. அன்றாட செலவுகளுக்கே சிரமமாக உள்ளது”என்றனர்.