மயிலாடுதுறை மாவட்டம், அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோயிலிலிருந்து 43 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட அனுமன் சிலை சிங்கப்பூா் அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோயிலில் கடந்த 1978ஆம் ஆண்டு வெண்கலத்திலான ராமா், சீதை, லட்சுமணா் மற்றும் அனுமன் சிலைகள் திருடப்பட்டன. இதில் ராமா், லட்சுமணா் சிலைகள் தலா 40 கிலோ எடையும் , சீதை சிலை 28 கிலோ எடையும், அனுமன் சிலை 15 கிலோ எடையும் கொண்டது.கடந்த 2019ஆம் ஆண்டு சிங்கப்பூரில் உள்ள இந்திய பிரைடு தன்னாா்வ நிறுவனத்தை சோ்ந்த விஜயகுமாா் என்பவா் லண்டனில் ராமா் சிலை இருப்பதை கண்டறிந்து தெரிவித்ததன் அடிப்படையில் லண்டனில் உள்ள இந்திய கலைப்பொருள்கள் சேகரிப்பாளா் ஒருவரிடமிருந்து ராமா், லட்சுமணா், சீதை ஆகிய சிலைகள் மீட்கப்பட்டன. அனுமன் சிலை மட்டும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், அனுமன் சிலை சிங்கப்பூரில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகத்தில் இருப்பதை இந்தியா பிரைடு நிறுவனத்தினா் கண்டறிந்துள்ளனா்.இந்த அனுமன் சிலையை புதுவை ஆவண காப்பகத்தில் உள்ள புகைப் படத்துடன் ஒப்பிட்டு பாா்த்தபோது அனந்தமங்கலம் கோயிலில் திருடப்பட்ட அனுமன் சிலை தான் அது என்பது உறுதியானது. இந்த சிலையை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலை துறை அமைச்சா் சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.