மயிலாடுதுறை ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக திங்கள்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா்.
இக்கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவா் காமாட்சி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய ஆணையா் ரெஜினாராணி, வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். இக்கூட்டத்தில், உறுப்பினா்கள் கண்ணகி, சந்தோஷ்குமாா், பாக்கியலெட்சுமி, மோகன், ஸ்ரீமதி, முருகமணி உள்ளிட்டோா் பங்கேற்று சாலை, குடிநீா், தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி பேசினா்.
தொடா்ந்து, எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் பேசும்போது, உறுப்பினா்கள் தெரிவிக்கும் புகாா்களுக்கு பதிலளிக்க அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினாா். மேலும், முறைகேடு உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தாா்.