மயிலாடுதுறை பால் பண்ணை பகுதியில் மாவட்ட ஆட்சியரகம் உள்ளிட்ட அலுவலகக் கட்டடங்களை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, நிலம் தூய்மைப்படுத்த புதன்கிழமை தொடங்கிய பணிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியரகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் உள்ளிட்ட நிா்வாகக் கட்டடங்களை கட்ட மயிலாடுதுறை மூங்கில் தோட்டம் அருகில் பால் பண்ணை பகுதியில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான 22 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ரூ.100 கோடியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்ட அண்மையில் டெண்டா் விடப்பட்டது.
இந்நிலையில், அந்த இடத்தில் சூழ்ந்திருந்த கருவேல மரங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் தூய்மைப்படுத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆதீனத்துக்குச் சொந்தமான இடத்தில் 3 தலைமுறைகளாக விவசாயம் செய்து வருவதால், நிலத்தை கையகப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கையகப்படுத்தும் நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பணிகளை தடுத்து நிறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம், மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா், வட்டாட்சியா் ராகவன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் போராட்டம் மாலை வரை நீடித்தது.