கடலூர்: கடலூரில் தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 7 பேரை உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடலூர் நகரத்தை ஒட்டி பெய்ய கங்கணாபுரம் ஊராட்சி பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஒரு வீட்டிற்கு சர்வதேச அழைப்பு தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது. இந்த சர்வதேச அழைப்பின் காரணமாக மத்திய உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வந்தது.
வங்கதேசத்தில் இருந்து அடிக்கடி இந்த தொலைபேசி எண்கள் வந்ததாகவும், அதேநேரத்தில் சந்தேகப்படும்படி இந்த தொலைபேசி உரையாடல்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக மத்திய உளவுப்பிரிவு செல்வவிநாயகபுரத்தில் இருந்த அந்த வீட்டில் தங்கியிருந்த 7 பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலமாக இங்கு தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது. 10 லிருந்து 13 பேர் தங்கி இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
அதன் பிறகு 5 பேர் சென்றுவிட்டதாகவும் மீதமிருந்தவர்கள் தொடர்ந்து இங்கேயே தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இங்கு சுற்றுவட்டாரப்பகுதியில் இவர்கள் யாருடனும் தொடர்பில் இல்லை. இவர்கள் மொழி புரியாதவர்கள் என்பதால் இந்த பகுதியை சேர்ந்தவர்களும் யாருக்கும் இவர்களை பற்றி தெரியவில்லை.
ஆனால் மத்திய உளவுப்பிரிவு சர்வதேச அழைப்பு இந்த பகுதிக்கு தொடர்ந்து வந்துகொண்டிருந்ததால் அவர்கள் இந்த வீட்டை தொடர்ந்து கண்காணித்து இன்று விசாரணைக்கு அழைத்திருந்தனர். இந்த வீட்டை சுற்றி காவல்துறை குவிக்கப்பட்டு அந்த வீட்டில் இருந்தவர்கள் யார், அவர்கள் பாஸ்போர்ட் மூலமாக இங்கு வந்து தங்கியுள்ளாரா? அனுமதி பெற்று தான் இங்கு வந்துள்ளனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களிடம் செல்போன்களில் ஆய்வு செய்ததாக தெரிகிறது. அதேசமயத்தில் இந்த பகுதிக்கு மத்திய உளவுப்பிரிவு வந்ததும் கடலூர் காவல்துறையும் இந்த வீட்டை சுற்றி வளைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் கடலூர் பகுதியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.