சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வின் மற்றொரு பகுதியான கொந்தகையில் ஒரே குழியில் 7 முழு வடிவ மனித எலும்புக்கூடு கிடைத்துள்ளன. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில், கீழடி- அகரம்- மணலூர்- கொந்தகை ஆகிய 4 இடங்களில் மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறை சார்பாக இது வரை 6 கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன.
கொந்தகை இரண்டாம் கட்ட அகழாய்வின் போது ஒரு குழியில் மேற்புறத்தில் 1 அடி ஆழத்திலே நேற்று வரை 3 எலும்புக் கூடுகள் கிடைத்தன. மேலும் அதனை தொடர்ந்து அதே குழியில் அதன் அருகே அருகே மேலும் 3 முழு வடிவ மனித எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன.
இதுவரை ஒரே குழியில் 7 மனித எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளதால் ஆராய்ச்சியாளர்களிடையே மிகுந்த ஆர்வத்தை தூண்டியுள்ளது. இங்கு கிடைத்த மனித எலும்புக் கூடு ஆணா ,பெண்ணா மற்றும் எத்தனை வருடம் பழமையானது என்பது ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என்று தொல்லியல் துறையினர் கூறினர்.