சிதம்பரம் அருகே வேளக்குடி கிராமத்தின் வயலில் பெரிய முதலை ஒன்று இருப்பதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சிதம்பரம் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதனைத்தொடர்ந்து சிதம்பரம் வனவர் அஜிதா தலைமையிலான வனத்துறையினர் சம்பந்தப்பட்ட கிராமத்திற்குச் சென்று கிராம வயலில் இருந்த முதலையை வலைவிரித்து பிடித்தனர்.
பின்னர் அதன் மீது ஈரத்துணியைப் போட்டுக் கட்டி முதலை பிடிக்கும் வாகனம் மூலம் சிதம்பரம் அருகே உள்ள வக்கிரமாரி ஏரியில் விட்டனர். பெரிய முதலையை உடனடியாக வந்து பிடித்ததால் அந்தப் பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனவே வனத்துறையினருக்கு அப்பகுதி கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இதேபோன்று இந்தப் பகுதியில் முதலையால் உயிரிழந்தவர்கள், கை, கால் இழந்தவர்கள் என பலர் உள்ளனர்.
எனவே வக்கராமரி ஏரியில் விடும் முதலைகள் மழைக்காலங்களில் தண்ணீர் வழியாக வந்துவிடுகின்றன. எனவே இந்தப் பகுதியில் பிடிபடும் முதலையைப் பிடித்து பாதுகாப்போடு இருப்பதற்கு தனி முதலைப் பண்ணை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.