தமிழகத்தில் இன்றுமுதல் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 மாத இடைவெளிக்கு பிறகு பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு கடந்த மே மாதம் 10-ஆம் தேதி ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. இதன்காரணமாக பேருந்து போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. சுமார் இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் போக்குவரத்து சேவை தொடங்கப்படுகிறது. இதை அடுத்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மயிலாடுதுறை கிளை பணிமனையில் இருந்து சரியாக ஆறு மணிக்கு பேருந்து நிலையங்களுக்கு பேருந்துகள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு புறப்பட்டன. முன்னதாக ஓட்டுநர்கள் நடத்துனர்கள் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை கிளைக்கு உட்பட்ட மயிலாடுதுறை பணிமனையில் உள்ள 73 பேருந்துகள், சீர்காழி பணிமனையில் உள்ள 42 பேருந்துகள் மற்றும் பொறையாறு பேருந்து நிலையத்தில் உள்ள 29 பேருந்துகளில் பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் செல்லும் பேருந்துகள் தவிர்த்து பிற பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படுகின்றன. இன்று முதல் நாள் என்பதால் பெரும்பாலும் எல்லா பேருந்துகளிலும் குறைந்த அளவிலான பயணிகளே பயணம் செய்தனர். முன்னதாக பயணிகளுக்கு வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கிருமிநாசினி கொடுக்கப்பட்டு, கவசம் அணிந்த பயணிகள் மட்டுமே பேருந்தில் அனுமதித்தனர். மேலும் இரண்டு மாதங்களுக்குப் பின் பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.