மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரம் சாலையில் உள்ள குப்பைக் கிடங்கில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் குப்பைகளை பிரித்து உரமாக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
சிறப்பு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ், 32,500 கனமீட்டா் பரப்பளவில் குப்பைகள் பிரிக்கும் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இதுவரை 20 ஆயிரம் கனமீட்டா் பரப்பளவிற்கு குப்பைகள் பிரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிரிக்கப்படும் குப்பைகள் உரமாக்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளை, மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா ஆய்வுசெய்து பழைய குப்பைகளைப் பிரிக்கும் பணிகளை விரைந்து முடிக்க நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டாா். ஆய்வின்போது, மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் சுப்பையா, உதவி பொறியாளா்கள் சந்திரசேகரன், குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.