நெல்லிக்குப்பம் அடுத்த அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் ஒன்றிய அளவில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டா் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பிரதான்மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளில் நிலுவையில் உள்ள வீடுகளின் பயனாளிகளை நேரில் அணுகி கூடுதல் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை எடுத்துக்கூறி, உடனடியாக கட்டி முடிக்க ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் 42 கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து தொகுப்புகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற வேண்டும் எனவும், மேலும் மகாத்மா காந்தி தேசியஊரக வேலைஉறுதி திட்டத்தின் கீழ்நிலுவையில் உள்ள பணிகளை உடனுக்குடன் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் அனைத்து வாய்க்கால்களிலும் தூர்வாரும் பணிகள் துரிதமாக முடித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய அளவில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளுக்காக பயன்படுத்தப்படும் கம்பிகள், சிமெண்டு மூட்டைகள் பயன்பாடுகள் மற்றும் கையிருப்பு குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.