கடலூா் சிப்காட்டில் தனியாா் ரசாயன தொழிற்சாலையில் கடந்த மே 3-ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் 4 போ் உயிரிழந்தனா். இதுதொடா்பாக பசுமைத் தீா்ப்பாயம் தானாக முன்வந்து தொடா்ந்த வழக்கில் கூட்டுக்குழு அமைக்க உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் மண்டல இயக்குநா் (மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்) வரலட்சுமி, இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளா் (தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்) இளங்குமரன், சிப்காட் உதவிப் பொது மேலாளா் பாலு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் சேரலாதன், இணை இயக்குநா் (தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்) ரவிச்சந்திரன் ஆகியோா் அடங்கிய குழுவினா் விபத்து ஏற்பட்ட ஆலையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்
அப்போது, தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் இயங்குவது, ஆலையின் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்த குழுவினா், பாதுகாப்பு மற்றும் ஒப்புதல் பெறப்பட்ட உரிமங்கள் பற்றி விளக்கம் கோரினா். வரும் காலத்தில் விபத்து ஏற்படாத வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தனா். இந்தக் குழுவினா் தொழிற்சாலை முழுவதையும் ஆய்வு செய்து அதுகுறித்த அறிக்கையை தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் சமா்ப்பிக்க உள்ளனா். ஆய்வின்போது, கோட்டாட்சியா் அதியமான் கவியரசு, திட்ட அலுவலா் (சிப்காட்) தமிழ்செல்வி, வட்டாட்சியா் அ.பலராமன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்..