மத்திய கிழக்கு வங்கக்கடலில் மே 22-ஆம்தேதி உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து, ‘யாஸ்’ புயலாக மாறி, ஒடிஸா-மேற்குவங்கம் இடையே மே 26-ஆம் தேதி கரையை கடந்தது. இதன்பிறகு, தென் மேற்குப் பருவமழை காலம் தொடங்கியதால், வங்கக்கடலில் புயல் சின்னம் வாய்ப்பு குறைந்தது. இருப்பினும், அவ்வப்போது, வங்கக்கடலில் காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி உருவாகி மறைந்து வருகிறது.
இந்நிலையில், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை ஜூலை 11-ஆம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் கூறியது: மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஜூலை 11-ஆம் தேதி உருவாகவுள்ளது. இது ஒடிஸா நோக்கி நகர வாய்ப்புள்ளது. இது, வலுவடைய வாய்ப்பு இல்லை. ஆனால் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் கடலோர மற்றும் உள்மாவட்டங்களில் மழை வாய்ப்பு வெகுவாக குறையும். அதேநேரத்தில், தென்மேற்கு பருவக்காற்று தீவிரமாக இருக்கும் என்பதால், மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.