கொரோனா 2-வது அலை காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில், கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் பார்வையாளர்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், இங்குள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதில் 9 வயதுடைய நீலா என்ற பெண் சிங்கமும் 12 வயதுடைய பத்மநாபன் என்ற ஆண் சிங்கமும் உயிரிழந்தன.
இந்த நிலையில் விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் கடந்த 2006 -ம் ஆண்டு டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் இருந்து வண்டலூருக்கு பீஷ்மர், அனு என்ற வெள்ளைப் புலிகள் கொண்டுவரப்பட்டன. இங்கு பராமரிக்கப்பட்டு வந்த இந்த வெள்ளைப் புலி ஜோடிகள் 5-க்கும் மேற்பட்ட குட்டிகளை ஈன்றுள்ளது.
இந்நிலையில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 16 வயதுடைய பீஷ்மர் என்று புலி நேற்று திடீரென உயிரிழந்துள்ளது. உயிரிழந்த வெள்ளை புலிக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது தொற்று இல்லை என்பது உறுதியானது.
உடல்நலக்குறைவால் கடந்த 3 மாதங்களாக இருந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளது. இந்த வெள்ளை புலி வயோதிகம் காரணமாக உயிரிழந்ததாக வண்டலூர் உயிரியல் பூங்கா இணை இயக்குனர் சதீஷ் தெரிவித்துள்ளார்.